×

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருவாரூர்: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூரில் பசுமை பள்ளித் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை. பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய, மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பசுமை பள்ளி திட்டம் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளது. மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமின்றி நடுநிலைப் பள்ளிகளிலும் பசுமை பள்ளி திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Minister Anil Maheesh Mati , Tamil Nadu, government school, 9,000 teachers, minister Anbil Mahesh
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...